Title | : | விபரீதங்கள் இங்கே விற்கப்படும் -VIBHAREETHANGAL INGAE VIRKAPPADUM |
Author | : | |
Rating | : | |
ISBN | : | - |
Format Type | : | Kindle Edition |
Number of Pages | : | - |
Publication | : | Published February 5, 2021 |
விபரீதங்கள் இங்கே விற்கப்படும் -VIBHAREETHANGAL INGAE VIRKAPPADUM Reviews
-
வாவ்!!
என ஒரே வார்த்தையில் கூறிவிடலாம். அத்தனை சுவாரசியமாக எழுதப்பட்டிருக்கும் அக்மார்க் ராஜேஷ்குமார் பாணி நாவல்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ராஜேஷ்குமார் அவர்களின் நாவலொன்றிணைப் படிக்கிறேன். வாசிப்பின் மீதான காதலை எனக்குள் விதைத்தது ராஜேஷ்குமார் அவர்கள் தான். பள்ளிப்பருவத்தில் எதிர்பாராத விதமாக நான் வாசித்த அவரது நாவலொன்று என்னை முழுவதுமாக கட்டிப்போட்டுவிட நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்து முதல் சில மாதங்கள் அவரது நாவல்களை மட்டுமே வாசித்து வந்தேன். அவருடைய நாவல்கள் நூலகத்தில் இனி ஏதுமில்லை என்ற முடிவுக்கு வந்த பிறகே சுஜாதா, பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, இந்திரா சௌந்தர்ராஜன் என்று மாறினேன். அதனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு அவருடைய இந்த நாவலை வாசித்ததால் அவருக்கே உரித்தான சில பரிச்சியமான வரிகளை வாசிக்கும் போது "நாஸ்டால்ஜிக்" உணர்வு எழுந்தது.
வளர்மதி, ஒரு தனியார் நிறுவனத்தில் அக்கவுண்டண்ட். கணவன் ஹரி IBM நிறுவனத்தில் மென்பொறியாளர். அன்பான மாமனார், மாமியார் என அழகான குடும்பம். ஆனால் காவல் துறையில் பணியாற்ற வேண்டுமென்ற அவளுடைய கனவை பெற்றோர் நிராகரித்ததால், திருமணத்திற்கு பிறகு போலீஸ் இன்பார்மராக கணவன் ஹரி உள்பட யாருக்கும் தெரியாமல் ரகசியமாக, கமிஷனர் திரிபுரசுந்தரிக்காக வேலை செய்கிறாள். கோவையில் பெரும் செல்வந்தரான ஈஸ்வர், வருடாவருடம் நிறைய இலவச திருமணங்களை செய்து வைக்கிறார். அப்படி அவரால் வேறு வேறு வருடங்களில் இலவச திருமணம் செய்து வைக்கப்பட்ட 5 ஜோடிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்து போகிறார்கள். அவர்கள் அனைவருமே ரசின் எனப்படும் விஷத்தை உட்கொண்டு இறந்துப் போயிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் அந்த பெண்கள் அனைவரும் மூன்று மாதம் கருவுற்றிருந்தார்கள் எனும் ஒற்றுமை காவல் துறையின் சந்தேகத்தை ஈஸ்வர் மீது ஆழமாக பதிக்கிறது. காவல் துறையில் நிறைய அதிகாரிகளை ஈஸ்வர் பணம் கொடுத்து விலைக்கு வாங்கியிருப்பார் என்ற சந்தேகம் கமிஷ்னர் திரிபுரசுந்தரிக்கு இருப்பதால், ஈஸ்வரை கண்காணிக்கும் பொறுப்பினை வளர்மதிக்கு கொடுக்கிறார். அசாத்திய துணிச்சலும் புத்திக் கூர்மையும் கொண்ட வளர்மதி, இந்த விசாரணைக்கு உறுதுணையாக கல்லூரியில் தன்னோடு படித்தவனும் சமூக சேவைகளில் ஆர்வமுடையவனுமான பாரன்சிக்கில் பணிபுரியும் மனோஜை இணைத்துக் கொள்கிறாள். ஆனால் மனோஜ் ஈஸ்வரின் கைக்கூலி. வளர்மதி மற்றும் திரிபுரசுந்தரியின் திட்டங்களை உடனுக்குடன் ஈஸ்வருக்கு தெரிவித்து விசாரணை நகர விடாமல் செய்கிறான். சட்டத்திற்கு புறம்பாக ஈஸ்வர் ஏதோ செய்கிறார் ஆனால் என்னவென்று முழுதாக தெரியாமல் குழம்பிடும் வளர்மதி மற்றும் திரிபுரசுந்தரி, பணபலம், ஆள்பலம், மனோஜ் போன்ற துரோகிகளின் சூழ்ச்சி என அனைத்து தடைகளையும் தாண்டி எப்படி ஈஸ்வரையும் அவரது கூட்டத்தையும் சட்டத்தின் முன் ஒப்படைக்கிறார்கள் என்பது தான் "விபரீதங்கள் இங்கே விற்கப்படும்".
கொஞ்சமும் தொய்வில்லாமல் பரபரவென பக்கங்கள் பறக்கின்றன. மொபைலை (கிண்டிலில் படித்ததால்) கீழே வைக்க முடியாத அளவிற்கு அடுத்தடுத்து திருப்பங்கள் திணறடிக்கின்றன. புத்தகத்தை வாசிக்கும் போது நிச்சயம் ஒரு ரோலர்கோஸ்டர் அனுபவம் கிடைத்திடும். நிறைய திரைப்படங்கள் பார்த்து பழகிவிட்டதால் சில திருப்பங்களை முன்பே கணித்துவிட முடிகிறது. அங்கங்கே எழும் லாஜிக் மீறல்கள் கொஞ்சமாக உறுத்துகிறது. அதே போல ஏற்கனவே சொல்லப்பட்ட தகவல்கள் மீண்டும் மீண்டும் கதாபாத்திரங்களின் நடுவே உரையாடலாக வரும் போது கொஞ்சம் அலுப்பூட்டுகிறது. இதுபோன்ற சின்ன சின்ன குறைகள் வாசிக்கும் போது உறுத்தினாலும் இது ஒரு அட்டகாசமான திரில்லர் நாவல் என்பது உறுதி.
புத்தக வாசிப்பினை தொடங்கிட நினைத்து, புத்தக பரிந்துரை கேட்கும் நண்பர்களுக்கு தாராளமாக இந்நாவலை பரிந்துரை செய்யலாம். நிச்சயம் முழுதாக வாசித்து முடிக்காமல் இடையில் நிறுத்தமாட்டார்கள் என உறுதியாக சொல்வேன்.